சுற்றுலா மையமாக மாறும் பனமரத்துப்பட்டி ஏரி தமிழக அரசு செயலாளர் இறையன்பு ஆய்வு
டிசம்பர் 03,2009,00:00 IST
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுலா தலம் அமைக்க, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரசு செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி 2,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக 1911ல் ஆங்கிலேயரால் இந்த ஏரி அமைக்கப்பட்டது. ஏரியில் மலர் பூங்கா, குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி, ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் இரண்டு வால்டோர், சுற்றுலா மாளிகை உள்ளிட்ட பல்வேறு வசதியை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர். பனமரத்துப்பட்டி ஏரி இயற்கையாகவே மேடான பகுதியில் அமைந்துள்ளதால், மோட்டார் வைத்து பம்பிங் செய்யாமல் குடிநீர் சேலம் டவுன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜருகு மலையில் அடிவாரத்தில் வனப்பகுதியொட்டி அமைக்கப்பட்ட ஏரி பசுமையாக காட்சியளித்தது. இங்கு பல சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால், ஏரி வறண்டு, முள்புதர் சூழ்ந்தும் பரிதாபமாக காட்சியாளிக்கிறது.
ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து பொழுபோக்கு அம்சங்கள் கொண்ட சுற்றுலா தலமாக, ஏரியை மாற்றும் பொருட்டு, ஆய்வு பணி நடந்தது. தமிழ்நாடு சுற்றுலா துறை அரசு செயலாளர் இறையன்பு, நேரில் ஆய்வு செய்தார். பூங்கா, சுற்றுலா மாளிகை, உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு அம்சம் அமையும் இடம், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதி குறித்தும் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சுற்றுலாத்துறை அரசு செயலாளர் இறையன்பு நிருபர்களிடம் கூறியதாவது: பனமரத்துப்பட்டி ஏரி மிகவும் அழகாக இருக்கும் ஏரி. ஏரியில் சுற்றுலா தலம் அமைக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது. இன்று பனமரத்துப்பட்டி ஏரியில் முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வனஉயிரியல் பூங்கா, மலர் பூங்கா, சுற்றுலா மாளிகை உள்ளிட்ட பல வசதிகளுடன் சுற்றுலா தலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது சேலம் மாநகராட்சிஆணையாளர் பழனிசாமி, சேலம் டி.ஆர்.ஓ., ராஜரத்தினம், ஆர்.டி.ஓ., குழந்தைவேலு, தாசில்தார் வீரமணி, மாநகராட்சி ஜெ.இ., லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்
Dinamalar
|