திருட்டு வி.சி.டியை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனது ஆட்சியில் திருட்டு வி.சி.டியை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தேன். 2004ல் திருட்டு வி.சி.டியை தடுக்க சட்டத்தில் குண்டர் சட்டத்தை சேர்த்தது நான்தான். இதனால் திருட்டு வி.சி.டி. தொழில் நிறுத்தப்பட்டது. 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் திருட்டு வி.சி.டி. மீண்டும் கொடிகட்டி பறக்கத் தொடங்கிவிட்டது. மதுரை, சென்னையில் உள்ள அதிகார மையம் இதை நடத்துகிறது.
என்னங்க இது ரன்னிங் கமென்டரி மாதிரி...
தமிழ்நாட்டில் திரைப்பட துறையினர் முதல்வருக்கு அடுத்த மாதம் பாராட்டு விழா நடத்துகிறார்களாம். திருட்டு வி.சி.டியை ஒழித்ததற்கு பாராட்டு விழாவாம். அப்படி பாராட்டு விழா நடத்துவதாக இருந்தால் எனது தலைமையிலான ஆட்சி எடுத்த முடிவுக்குத்தான் பாராட்டாக அமையும். வேறு எதற்கு பாராட்டு?. (அப்போது குறுக்கிட்டுப் பேச அமைச்சர் பரிதி இளம்வழுதி எழுந்தார்)
ஜெயலலிதா: என்னங்க இது ரன்னிங் கமென்டரி மாதிரி... ஒவ்வொன்றுக்கும் எழுந்திருக்கிறார்.
உங்கள் தொழிலே அதுதான்:
அமைச்சர் பரிதி இளம்வழுதி:
திருட்டு வி.சி.டிக்கு திமுகவின் அதிகார மையம்தான் காரணம் என்று பேசுகிறார். நீங்கள் அந்த தொழிலை செய்ததால் உங்கள் ஆட்சியில் அந்த பிரச்சனை இல்லை. (அதிமுகவினர் எழுந்து கடும் கூச்சலிட்டனர்)
ஜெயலலிதா: பரிதி இளம்வழுதி தரம் தாழ்ந்த பேச்சுக்களை பேசுகிறார். இதைச் சொல்ல அவருக்கு தகுதி இல்லை.
சபாநாயகர்: நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும் (இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம்)
பரிதி இளம்வழுதி:- நீங்கள்தான் தரம் தாழ்ந்து, அற்பத்தனமாக பேசுகிறீர்கள்.
ஜெயலலிதா: (பரிதியை பார்த்து) இவர் அவ்வளவுதான். இவரது பேச்சுக்கு பதில் சொல்வதே தவறு.
(அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் இருவரும் இருக்கையை விட்டு எழுந்து முன் வரிசைக்கு ஓடி வந்தனர்)
சபாநாயகர்: நீங்கள் இருவரும் உங்கள் இருக்கையில் சென்று அமருங்கள்.
(இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட, பதிலுக்கு திமுக தரப்பும் குரல் தர அவையில் அமளி நிலவியது).
ஜெயலலிதா: ஆளும் கட்சி உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என்று முதல்வர் கூறியுள்ளார். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆளும் கட்சியினர் புகழ்வது மட்டும் அவருக்கு பிடிக்காது போலும். தமிழ் திரைப்பட கலைஞர்கள் புகழ்ந்து பேசினால்தான் முதல்வருக்கு பிடிக்கும் போலும்.
அமைச்சர் அன்பழகன்: திரைப்பட கலைஞர்கள் புகழ்ந்தால்தான் பிடிக்கும் என கூறுவது கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.