ரயில்வே பட்ஜெட்: சேலத்துக்கு ஒன்றுமில்லை
First Published : 25 Feb 2010 02:12:19 AM IST
Last Updated :
சேலம், பிப்.24: மக்களவையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் சேலத்துக்கு புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் சேலம் ரயில் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரயில்வே கோட்டத் தலைமையகம் மற்றும் மாவட்டத் தலைநகரம், மாநகராட்சி, தொழில் வளமிக்க நகரம் என்று பல்வேறு சிறப்புகள் இருந்தபோதிலும் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் சேலத்துக்கு ஒரு புதிய ரயில் சேவை கூட அறிவிக்கப்படாதது சேலம் ரயில் பயணிகள், பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1.11.2007-ல் சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது. இக் கோட்டம் 892 கிலோ மீட்டர் ரயில் பாதைகளை உள்ளடக்கியது.
சேலம் கோட்டத்தில் சேலம்-கோவை, சேலம்-சென்னை, சேலம்-மேட்டூர், சேலம்-தருமபுரி, சேலம்-விருத்தாசலம் ஆகிய 5 வழித்தடங்கள் உள்ளன. கரூர் ரயில்பாதையும் வந்தால் 6-வது பாதையாக அமையும்.
தமிழகம், கேரளத்தை வட மாநிலங்களுடன் இணைக்கும் மிக முக்கிய சந்திப்பாக சேலம் ரயில் நிலையம் உள்ளது. மேலும் தொழில் வளமிக்க சேலத்தில் இருந்து ஜவுளி உற்பத்தியாளர்கள், வெள்ளி தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். டன் கணக்கிலான சரக்குகள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும் சேலத்தில் ஏராளமான தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இவர்கள் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்ல இப்போது வரை பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
சேலம் ரயில்வே கோட்டம் ஆண்டுக்கு ரூ.300 கோடி வருமானம் ஈட்டித் தருகிறது.
இத்தனை பெருமைகள் இருந்தும் வளர்ந்து வரும் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ஒரு நேரடி புதிய ரயில் சேவையும் அறிவிக்கப்படவில்லை.
சேலத்தில் இருந்து தலைநகரான சென்னைக்குச் செல்ல இரவு நேரத்தில் மட்டுமே ஒரேயொரு நேரடி ரயில் உள்ளது.
எனவே காலை நேரத்தில் சேலத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லுமாறு ரயில் இயக்க வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக சேலம் மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
நீட்டிப்பு கூட இல்லை
ஹைடெக் நகரான பெங்களூருவில் சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
எனவே பெங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்றும் முடியாதபட்சத்தில் பெங்களூரு-தருமபுரி ரயிலை சேலம் வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்றும் பயணிகள் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
கோவை-ஈரோடு பாசஞ்சர் ரயிலை சேலம் வரை நீட்டிக்க வேண்டும், நெல்லை-ஈரோடு ரயிலையும், செங்கோட்டை-ஈரோடு இடையே அறிவிக்கப்பட்ட ரயிலையும் சேலம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
சேலம்-கோவை மார்க்கத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை என்று நான்கு மாநகராட்சிகள் உள்ள நிலையிலும் சேலம்-நெல்லை மார்க்கத்தில் சேலம்,ஈரோடு,மதுரை, நெல்லை என்று 4 மாநகராட்சிகள் உள்ள நிலையிலும் ஒரு புதிய ரயில் கூட அறிவிக்கப்படவில்லை.
பெங்களூர்-கோவை இன்டர்சிட்டி ரயிலை எர்ணாகுளத்துக்கு நீட்டிக்க முடிந்த மத்திய அரசால், நெல்லை-ஈரோடு ரயிலையோ, கோவை-ஈரோடு ரயிலையோ, பெங்களூர்-தருமபுரி, சென்னை-அரக்கோணம் விரைவு ரயில், சென்னை-ஏலகிரி விரைவு ரயிலையோ ஏன் கோட்டத் தலைநகரான சேலம் வரை நீட்டிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சேலம் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜி.ஹரிஹரன்பாபு.
கோவை-திருப்பதி
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் தினசரி 15 மணி நேரம் வெறுமனே நிற்கிறது. அதை பெங்களூர் வரையாவது இயக்க வேண்டும்.
சேலத்தில் பகலில் வெறுமனே நிற்கும் எழும்பூர் ரயிலை சேலம்-கோவை வரை இருமுறையாவது இயக்கலாம் என்ற மாணவ-மாணவிகள், தொழிலாளர்களின் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டது வருத்தமளிக்கிறது என்கிறார் அவர்.
இருப்பினும் சரக்கு கட்டணம் உயராததும் கோவையில் இருந்து திருப்பதிக்கு சேலம் வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுவதும், தூரந்தோ ரயில் சேவையும் சேலம் மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் என்றார் அவர்.
Dinamani 25.02.2010
_________________ MDL-Salem
|