சேலம்:ரயில் சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு, தெற்கு ரயில்வே சார்பில் ஆறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ராம் கூறியதாவது:சேலம் ரயில்வே கோட்டத்தில், 2009-10ம் ஆண்டு பயணிகள் போக்குவரத்தின் மூலம், 261 கோடியே 52 லட்சம் ரூபாய், சரக்கு போக்குவரத்து மூலம், 116 கோடியே 61 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இது அதிகம்.
ரயில்வே பட்ஜெட்டில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர், கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை வடக்கு, பீளமேடு, போத்தனூர் ரயில் நிலையங்கள் விரிவுப்படுத்தப்பட உள்ளன.
செம்மொழி மாநாட்டுக்கு எந்தெந்த பகுதியில் இருந்து ரயில் இயக்க வேண்டும் என்று மாநில அரசு திட்ட அறிக்கையை தயார் செய்து கொடுத்தால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். சேலம் ரயில்வே கோட்டத்தில் 30 மேம்பாலங்கள் கட்ட, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.ஆனால், நில ஆர்ஜிதம் உள்ளிட்ட செயல்களில், மாநில அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாததால், சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நான்கு இடங்களில் மட்டுமே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.
சேலம் - கரூர் அகல ரயில்பாதை பணிக்கு நடப்பாண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்து. சேலம் - நாமக்கல் அகல ரயில்பாதை பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும். கரூர் - நாமக்கல் அகல ரயில் பாதை பணி, 2011 மார்ச்சுக்குள் நிறைவடையும்.இம்மாத இறுதிக்குள் குன்னூர் - ஊட்டி ரயில் பாதை சீரமைப்பு பணி முடிந்துவிடும். ஈரோட்டில் இருந்து பழனிக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்க, முதல் கட்டமாக, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் அதற்கான பணி துவங்க உள்ளது. சேலம் ரயில்நிலையத்துக்கு, ரயில்கள் 92 சதவீதம் சரியான நேரத்துக்கு வந்து செல்கின்றன.தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஆண்டு 55வது ரயில்வே வாரவிழா கொண்டாடப்பட்டது. இதில், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு, இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், ரயில் இயக்கம், பர்சனல் பிரிவு, சிக்னல் மற்றும் கம்யூனிகேஷன், கேட்டரிங் யூனிட் (சைவம்) ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்த ரயில் சேவை புரிந்தமைக்காக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு ராம் கூறினார்.
Source :
http://www.dinamalar.com/General_detail ... =4/16/2010